கூவம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் சென்னையின் வளர்ச்சியை நீங்கள் வரலாறாக எப்பொழுதும் எழுத முடியாது. கூவத்தை ஒட்டி தான் சென்னையின் வளர்ச்சி அமையும். ஏனெனில், சென்னையின் பிரதான சாலைகள், கூவத்தை ஒட்டியோ அல்லது கடந்தோ தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வரத்தை கடலில் சேர்ப்பது முதல்; மனிதனால் உருவாக்கப்படும் கழிவுகளை கொண்டு போய் சேர்ப்பது வரை. மனிதனையும் இயற்கையும் கண்மூடித்தனமாக நம்பி; எதைக் கொட்டினாலும் தன்னுள் வாங்கி கடலினில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. ராணிபேட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கும் கூவமானது பூந்தமல்லி வரை சுத்தமாகவே ஓடி வருகிறது. அதன்பிறகு நதியானது சாக்கடையாக மாறுகிறது. இந்த அவலநிலையை போக்க கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்கள் போடப்பட்டது; ஆனாலும் சாக்கடை இல்லாத கூவம் என்பது நமது கனவாகவே இருக்கிறது. இந்த காணொளியில் நாம் பார்க்க இருப்பது இந்த கூவம் மறுசீரமைப்பிற்காக இத்தனை ஆண்டுகளில் செலவழிக்கப்பட்ட தொகைகள் எப்படி வீணாகி இருக்கிறது? ஏன் இன்றளவும் கூட கூவம் சீரமைப்பு திட்டத்தை அரசால் வெற்றிகாரமாக நிறைவேற்ற முடியவில்லை எனபதை பற்றிதான் இந்த காணொளி. முழுமையாக பாருங்கள்; கருத்தை உள்வாங்குங்கள்; உங்களது கருத்தையும் பதிவிடுங்கள். இது எங்களை மென்மேலும் மெருகேற்ற உதவும்.
கூவம் நதியானது, அடையாறு ஒருபுறம் கொசஸ்தலையாறு மறுபுறம் என இரண்டிற்கும் இடையே ஓடுகிறது. மொத்தம் 72 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியானது 18 ம் நீளம் மட்டுமே சென்னை நகருக்குள் ஓடுகிறது. இது சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கலோனல் லாஸ் பாலத்திற்கு வந்தவுடன் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு கிளையாக பிரிந்து மீண்டும் நேப்பியார் பாலத்தின் அருகே ஒன்றாக கலக்கிறது. வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின்படி 1790 இல் பச்சையப்ப முதலியார், சென்னை மாகாணத்தின் கொடைவள்ளல், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கோளீஸ்வரன் பேட்டை கோயிலில் வழிபடுவதற்கு முன்னர்; கூவம் நதியில் குளித்து விட்டு செல்வார் என சொல்கிறது. மேலும் வடக்கு புறத்தில் இருக்கும் மக்கள் இந்தக் கோயிலுக்கு விழாக் காலங்களில் மலர்களை படகில் கொண்டுவர இந்த நதியைபயன்படுத்தி இருக்கிறார்கள். 1950 வரை நதியானது மிகத் தூய்மையாகவும் நிலத்தடி நீரை உயர்த்தும் ஒரு நதியாகவும் அழகாக இருந்திருக்கிறது. விரைவான நகரமயமாக்கல் மூலம் இந்த நதியானது, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலுடன் கூடிய சாக்கடையை சுமக்கும் கழிவுநீர் கால்வாய் ஆனது.
1890-இல் இந்த நதியானது துறைமுகத்திலிருந்து ஒரு இணைப்பு கால்வாயாக பயன்படுத்த திட்டமிடப்பட்டது ஆனால் இதில் சிரமம் என்னவென்றால், இதில் வரும் வெள்ளப்பெருக்கினால் நேப்பியர் பாலம் அருகே அதிகப்படியான மணல் தேங்கி சிறு தீவுகள் போன்று உருவானது. இதனை சரி செய்ய நீர்வளத் துறை மூலம் ரூபாய் 10 லட்சம் செலவிடப்பட்டது. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு 1968 முதல் 1973 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மணல் தேங்குவதை கட்டுப்படுத்தவும், சேத்துப்பட்டு முதல் நேப்பியார் பாலம் வரையில் உள்ள கூவம் நதியின் கரையை அழகுபடுத்தவும் ரூபாய் இரண்டு கோடியே 20 லட்சம் செலவிடப்பட்டது. இந்த திட்டத்தினால் படகு குழாம்கள் கட்டப்பட்டு, கூவம் நதியில் படகு விட தீர்மானிக்கப்பட்டது.அடுத்து வந்த அரசுகளால் இத்திட்டம் கவனிக்கப்படாததால் இத்திட்டம் சில வருடங்களில் தோல்வி அடைந்தது. 1994-ல் நீர் வழியை செம்மைப்படுத்த ரூபாய் கோடியே 80 லட்சம் செலவிடப்பட்டது.
2001 இல் மத்திய அரசின் உதவியுடன் 1200 கோடி திட்டத்தில் கழிவுநீர் வலையமைப்பை மேம்படுத்தவும்; முறையற்ற கழிவுநீர் கலப்பை தடுக்கவும் செலவிடப்பட்டது. மேலும் ரூ.750 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட்டது. இது சென்னையின் மக்கள் தொகைக்கேற்ப இல்லை என்பதால். தோல்வியில் முடிந்து போனது. கூவம் நதியில் சுமார் 10 கோடி லிட்டர் கழிவுநீர் இன்றளவும் கலக்கிறது.
2008 ஆம் ஆண்டு கூவம் நதி மற்றும் அதன் கிளை நதிகளின் சூழலியலை மறு சீராக்கம் செய்ய “சென்னை நதிகளின் மறு சீராக்க அறக்கட்டளை” என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு; உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.2300 கோடி செலவிடப்பட்டது. இந்த அமைப்பு கூவம் நதி மாசுபடுவதற்கு சொன்ன காரணம் என்னவெனில் “கூவம் நதியில் கழிவு நீரகற்றும் வாகனங்களில் மூலம் கொட்டப்படும் கழிவுகளால் மாசுபடுகிறது; இதன் மூலம் தண்ணீரில் மிதக்கும் கழிவுகளால் 75 விழுக்காடு கூவத்தின் அகலத்தை அடைத்துக் கொள்கிறது” என தெரிவித்தது. கூவத்தை சீரமைக்க தமிழக அரசால் பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அமெரிக்காவில் உள்ள அந்தோனியோ ஆற்றையும், 2009-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம் கே ஸ்டாலின் தலைமையில் சிங்கப்பூர் நதியும் பார்வையிட்டது.
கூவம் கரையோரம் இருந்த அதிகப்படியான ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டன; ஆனாலும் அதிகப்படியான கழிவுநீர் கலக்கும் குழாய்கள் அகற்றப்படவில்லை. 2006-ஆம் ஆண்டு துணை முதல்வர் தலைமையில் “சென்னை நதிகளின் ஆணையம்” அமைக்கப்பட்டு கூவம் நதியான வருகின்ற 10 வருடங்களுக்குள் சுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள கூவம் நதியில், பூண்டி நீர்தேக்கத்திலிருந்து, 200 கன அடி உபரி நீரானது திறந்து விடப்பட்டது. அதன் நோக்கம், அப்படியாவது கூவம் தன்னை சுத்த படுத்தி கொள்ளும் என எண்ணி விடப்பட்டது.
இன்றளவும் எந்த கட்சியின் ஆட்சி தமிழகத்திற்கு அமைந்தாலும், கூவம் ஆற்றை சீரமைக்க எதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைவார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற முயன்றாலும், கூவமே இறுதியில் வெற்றி பெறும்.
நாமும் அரசும் என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் அன்டோனியோ நதியானது கூவத்தைப் போன்று மனிதர்களால் மாசுபடுத்தப்பட்டது. அதனை அரசும் மக்களும் சேர்ந்து தூய்மைப்படுத்தி இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள். முதலில் கூவத்தில் கழிவுநீர் கலக்கும் வழிகளை கண்டறிய வேண்டும்; பிறகு மாற்று வழிகளை கண்டறிந்து அத்துடன் இணைக்க வேண்டும். மாற்று வழிகளுடன் இணைந்த பிறகு குழாய்களை, துண்டிப்பது அல்லது அழிப்பதோ மேற்கொள்ள வேண்டும். மேலும், ஏதாவது தொழிற்சாலைகள் அதில் ஈடுபட்டால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கூவம் நதியை திருவள்ளூர் நகரத்தில் இருந்து பகுதி வாரியாக பிரித்து, வற்றச் செய்து, தேங்கி உள்ள குப்பைகள், ஆற்று படுகையின் அடியிலுள்ள நச்சு தன்மையுள்ள சேற்றையும், கனமான வண்டல் மற்றும் சிதைவுகளையும் அகற்ற வேண்டும். மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீரை, கூவம் நதியில் கலக்க செய்ய வேண்டும். இந்த நீரில் மேலும் கழிவு நீர் குழாய்கள் மூலமாகவோ அல்லது கழிவு நீரகற்றும் வாகனங்களின் மூலமாகவோ கலப்பதை தடுக்க வேண்டும். இதனை எல்லாம் செய்வதற்கு முன், கூவம் நதியோரம் இருக்கும் பகுதிகளின் அனைத்தையும் பாதாள சாக்கடைகள் இணைத்து கழிவுநீர் கூவத்தில் கலப்பதை தடுக்க வேண்டும். கூவத்தை பகுதி வாரியாக பிரித்து தடுப்பணைகள் கட்டி அமைவிடத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் நிர்வகித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வருடம் ஒருமுறை எந்தப் பகுதி தடுப்பணைகள் செம்மையாக செயல்படுகிறதோ, அதற்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். புதிய நீரில் நல்ல பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கரிம கழிவுகளை அழிக்கும். தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளை உட்கொள்ளும் பாதுகாப்பான நுண்ணுயிர்களை அறிமுகப்படுத்த வேண்டும். நீரில் இருந்து நச்சுக்களையும் கனஉலோகங்களையும் உறிஞ்சக்கூடிய குறிப்பிட்ட நீர்வாழ் தாவரங்களை வளர்க்க வேண்டும். சான் அன்டோனியோ நதியில் செய்வது போல , தண்ணீரை மாற்றும் இந்த நடவடிக்கைகளை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செய்தாலே கூவம் பழைய நிலமைக்கு மாறும் என்பது எங்களது கருத்து. நன்றி