தோல் வெளுப்பாக்குதலும்; தோலின் ஆரோக்கியமும்

வணக்கம்! இந்த காணொளியில் நாம் அலசப்போவது இப்போதிருக்கும் இளம் சந்ததியினர், தனது தோலின் நிறத்தை மாற்ற முயற்சிப்பதை பற்றிதான் பேசப்போகிறோம். இன்றைக்கு எல்லோரது வீட்டிலும், மாத வரவு செலவு திட்டத்தில், குறிப்பிட்ட ஒரு தொகையானது அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இளம் சந்ததியினர் அதுவும் பெண்கள் இருப்பின் சற்று கூடுதல் செலவும்; ஆணாக இருந்தால் சற்று குறைந்த செலவும் இருக்கலாம். குளியறையை சாதாரணமாக, முகம் கழுவ பயன்படுத்தினாலும் கூட, இரண்டு அல்லது மூன்று வேதியியல் கழுவிகள் இல்லாமல் பயன்படுத்துவது இல்லை. சாதாரண முடிதிருத்தும் கடைகளில் கூட தற்பொழுது “brightning”, “Glow”, “de-tone”, “even-tone” என்ற வார்த்தைகள் பரவலாக பேசப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை தலை மற்றும் உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து வெயிலில் தோலை காட்டி, சுடுதண்ணீரில் குளிக்கும் முறையை, இன்று ஓரிரு மணிகளில் சலூன் கடைகளிலும்; அழகு நிலையங்களிலும் முடிந்து விடுகிறது. ஈரோடு மஞ்சள் இரண்டு வகை உண்டு; 1.கொம்பு மஞ்சள்-சற்று பெரியதாக இருக்கும்; 2. கஸ்தூரி மஞ்சள்-இது சற்று சிறியதாக இருக்கும். இதில் கொம்பு மஞ்சள் எனப்படும், மஞ்சளை வெயிலில் காயவைத்து அரைத்து, பொடியாக்கி முகத்துக்கும், உடம்புக்கும் பூசி வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகள், அதாவது முகப்பரு, தோல் வீக்கம், தோல் சிவந்த போதல் போன்றவை தடுக்கப்படுகிறது. மேலும் கஸ்தூரி மஞ்சளை அரைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து குடிக்கும் பொழுது முகப்பொலிவு கிடைக்கும்.இப்படியெல்லாம் தோலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்த நாம், இன்று இணையத்திலும் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வரும் நபர்களின் தோலின் நிறத்தை பார்த்து, தோல் ஆரோக்கியத்திற்கும், தோல் வெளுப்பக்குதலுக்கும் வேறுபாடு புரியாமல் கண்டதை தேடி அலைந்து, அதில் PH அளவை பார்த்து வாங்கி பூசிக்கொள்கிறோம்.    

அறிவியல்பூர்வமாக ஒருவரின் நிறத்தை மரபியலாக நிர்ணயிப்பது நமது ஜீன்கள் தான். இந்த ஜீன்கள், தோலின் நிறத்தை கொடுக்கக்கூடிய “மெலனின்” எனும் நிறமியை கட்டுப்படுத்துகின்றன. சாதாரணமாகவே, இந்தியாவின் காலநிலைக்கு ஏற்ப தென்னிந்தியா மக்களின் தோலில் அதிக அளவு மெலனின் அளவு குறியீடு 48 ஆக இருப்பதால் சற்று கருப்பு நிறத்துடனும்;  வட இந்திய மக்களின் மெலனின் குறியீடு 39 குறைவாக இருப்பதால் வெளிர் நிறத்துடன் இருக்கிறார்கள்.மேலும் கிழக்கு மற்றும் மேற்கு மாநிலத்தவரின் மெலனின் அளவு குறியீடு 41 ஆக உள்ளது. தென்னிந்திய மக்கள் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருப்பதால்; சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீச்சு  சற்று அதிகமாக இருக்கும்;  அதனிலிருந்து தோலினை பாதுகாக்க மெலனின் மிகவும் பயன்படுகிறது. நாம் பார்க்கும் இந்த தோல் நிறத்தின் வேறுபாடு, இப்பொழுது மட்டுமில்லாமல் ராமாயண காலத்தில் இருந்து இருந்திருக்கிறது; ராவணனும் அவனைச் சார்ந்தவர்களும் கருப்பாக இருப்பார்கள்; ராமனும் அவனைச் சார்ந்தவர்களும் வெளிர் நிறமாக இருந்தார்கள் என குறிப்பிடப்படுகிறது. 

80 மற்றும் 90களில் சருமத்தை வெண்மையாக்கும் சில கிரீம்களின் விளம்பரங்களை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். அதனுடைய எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ மட்டும் தான் இருந்தது. இன்று சருமத்தை வெண்மையாக்கும் வியாபாரம் இணையம் வழியாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மிகவும் அதிக காணப்படுகிறது. மேலும் சமூக ஊடங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த வேதியியல் பொருட்களின் அறிவியல் பூர்வமான தரவுகள் இல்லாமலே, ஏதோ ஒரு மாயையின் மூலமாகவவோ வாங்கி, அதன் பக்க விளைவுகள் அறியாமலே பயன்படுத்தப்படுகிறது. 

google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0

ஒரு காலத்தில் சருமத்தை வெண்மையாக்குதல் என்பது, பெரும்பாலும் பெண்களின் கவலையாகக் கருதப்பட்ட ஒன்று, இப்போது ஆண்கள், பதின்ம வயதினர் மற்றும் திருநங்கைகளிடமும் காணப்படுகிறது. இது சரும நிறத்தை வெண்மையாக்குவதை வெறும் அழகு சார்ந்த விஷயமாகக் கருதாமல், ஒரு முக்கியமான சரும ஆரோக்கியப் பிரச்சினையாக ஆக்குகிறது.

சரும வெண்மையாக்கும் என்னும் இந்த கவர்ச்சியானது, தனியார் தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சி மற்றும் திரைப்படங்களில் மண் சார்ந்த கலைஞர்களுக்கும் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்; நிறம் பார்த்து அயல் மாநிலத்தவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மூலம் எளிதில் பரவியது. சாதாரண செய்தி வாசிப்பாளர் கூட சருமத்தை வெண்மையாக வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு இது தள்ளியது. மேலும் தற்பொழுது உள்ள சமூக ஊடகங்களில் பரப்பப்படும் படங்கள் கூட வடிப்பான் (ஃபில்டர்) கொண்டு எடுக்கப்படுகிறது. இது சருமம் வெண்மையாக இருப்பது போன்ற தோற்றமளிக்க உதவுகிறது.

புரிதலின்மை:

இளம் தலைமுறையினருக்கு தோலின் ஆரோக்கியத்திற்கும்; தோலின் பொலிவிற்கும் வேறுபாடு புரியாமல் தவிக்கிறார்கள். தமிழில் ஒரு சொல்லிடை உண்டு; “பன்றி குட்டியும் பருவத்தில் நன்றாக இருக்கும்”. ஏனென்றால் அனைத்து விலங்கினங்களும் அதனுடைய பருவத்தில் ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் சம அளவோடு இருப்பதால் அதன் மேற்புறத்தில் அழகாகவே காட்சியளிக்கும். அதுபோலத்தான் மனிதர்களின் தோல் என்பதே ஆரோக்கியத்தில் வெளிப்பாடு!. உடல் ஆரோக்கியமாக இருப்பின் தோலும் ஆரோக்கியமாகவும் பொலிவாகவே இருக்கும். தற்பொழுது, துரித உணவுகளால் உடல் ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு ஊட்டச்சத்துக்களை தோலுக்கு, கிரீம்கள் மூலமாகவும் ஊசிகள் மூலமாகவும் கொடுத்து, குறுகிய கால தோற்றப் பொலிவை பெற முயற்சிக்கிறோம். 

யாருக்கு தேவை சிகிச்சை:

மெலஸ்மா மற்றும் அழற்சிக்குப் பிந்தைய ஹைப்பர்பிக்மென்டேஷன் ஆகியவை பொதுவான நிறமிக் கோளாறுகள் ஆகும். அவை, குறிப்பாக அடர் நிற சருமத்தில், நீடித்ததாகவும் மன உளைச்சலைத் தருவதாகவும் இருக்கலாம். இந்த நிலைகளுக்கு சிகிச்சை தேவைப்படலாம். ஒரு நிறமிக் கோளாறுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஒரு நபரின் இயல்பான, உள்ளார்ந்த சரும நிறத்தை வெண்மையாக்க முயற்சிப்பதற்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடுதான் முக்கியம். இந்த வேறுபாடு நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.

என்ன செய்ய வேண்டும்?

முதலில் சருமத்தை வெளுப்பாகும் மருந்துகளில் அதீத ஆற்றல் கொண்ட ஸ்டீராய்டுகள் எனப்படும் வேதியியல் பொருட்களும் கலந்திருக்கின்றன என்பதனை உணர வேண்டும். மேலும் ஒரு மருந்து நாம் எதிர்பார்த்த ஒரு முடிவை தராத பட்சத்தில்; மருத்துவரின் ஆலோசனை இன்றி நாமே அடுத்த மருத்திற்கு விளம்பரங்களை நம்ப தாவிப் போகின்றோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? என்பது நமக்கு புரியவில்லையா? இதனால் பக்க விளைவுகள் அதிகமாகி கடைசியாக மருத்துவரிடம் போய் தலை குனிந்து நிற்கும் நிலைக்கு நாம் நிற்க வேண்டுமா?

இன்றைய ஊடகங்கள் செய்யவேண்டியது என்னவெனில், தோல் நிறத்தை ஒரு அழகியல் படிநிலையாகக் கருதும் போக்கிலிருந்து விலகி, தோல் ஆரோக்கியத்தை நோக்கி உரையாடலை நகர்த்துவதே அது.இதன் செய்தி எளிமையானது, ஆனால் முக்கியமானது. ஆரோக்கியமான தோல் எல்லா நிறங்களிலும் உள்ளது. நமது உளவியலை மாற்றிகொள்ள வேண்டும்; வெளுப்பான தோல் இருந்தால் மட்டும்தான் இந்த சமூகம் நமக்கு மரியாதை கொடுக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையை தூர எறிந்துவிட்டு; தன்னமிப்பிக்கை கொண்டு திறமையை வளர்த்துக்கொண்டு, இயற்கையோடு இருக்கின்ற அந்த புத்துணர்வை முகத்தில் இயற்கையாக நல்ல ஆரோக்கியத்தின் மூலமாக வளர்த்துக்கொண்டு; இளைய தலைமுறையினருக்கு தோல் ஆரோக்கியத்தை சொல்லி வளர்ப்போம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *