சமீபத்தில் சில அறிவியல் இதழ்களிலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் படித்த செய்தி தான் என்னை இந்த நினைவுகளை எழுதத் துண்டியது. ஆம்!
”ஆப்பிரிக்க நத்தைகள் இந்திய மண்ணில் நுழைந்து, அது விவசாயத்திற்கு மிகுந்த சேதத்தையும்; மேலும் வீட்டுத் தோட்டங்களுக்கும் பெரிய அளவிலான சேதத்தையும் விளைவிக்கின்றன” என்றும் அவைகள், சில நோய்க்கு காரணமான உயிரினங்களை மனிதர்களுக்கு பரவ உதவியாக “கடத்தியாக” செயல்படுகிறது என்றெல்லாம் படித்தேன். மேலும் சென்னையில் போரூர் ஏரியின் அருகிலோ, ரெட்டேரி ஏரியின் அருகிலும் நத்தைகள் சிறிய குவியலாக வைக்கப்பட்டு ரூபாய் 100க்கு விற்கப்பட்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு எனது பழைய நினைவுகள் வந்து போகின்றன. முதன் முதலில் நத்தைக்கறியை எப்படி சுவைத்தோம்? அதன் சுவை என்ன என்பதை நினைவில் வந்து போகின்றன.
எங்களது ஊரின் அருகே ஓடை என்று சொல்ல முடியாமலும், ஆறு என்று சொல்ல முடியாமல் இடைப்பட்ட அளவில் ஒரு ஆறு ஒன்று உள்ளது. அது மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த நேரங்களில் அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைகளின் மூலம் எங்கள் பகுதிக்கு தண்ணீர் திருப்பி விடப்படும். எங்கள் ஊரின் எல்லைக்கு அருகே விளை நிலங்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பாறை உண்டு. அந்த பாறையானது செங்குத்தாகவோ கரடு முரடாகவோ இல்லாமல் ஒரு கால்பந்து பாதி அளவு நிலத்தில் புதைந்தார் போல் காட்சியளிக்கும். சுற்றியுள்ள விளைநிலங்களில் விளையும் தானியங்கள் அறுவடைக்குப் பின் அங்கே கொண்டுவந்து அடித்து, பிரித்து, காய வைத்து, பிறகு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். ஏனெனில் பாறைகள் அதிகளவு வெப்பத்தை உள்வாங்கி அதனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தரையில் இதுபோன்ற அறுவடை செயல்களில் ஈடுபட்டால் சிறிய கற்கள், மண் ஆகியவை தானியங்களோடு சேர்ந்துவிடும். ஆனால் இதுபோன்ற பாறையின் மேல் செய்வதால் சுத்தமான மற்றும் நன்கு உலர்ந்த தானியங்கள் கிடைக்கும். இந்த பாறையானது ஏறக்குறைய ஐந்திலிருந்து பத்து ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். மழைக்காலங்களில் ஆற்றின் தடுப்பணை மூலம் திருப்பி விடப்பட்ட தண்ணீரானது, ஓடையின் வழியாக வந்து பின்னர் சிறு கால்வாய்கள் மூலம் வயல்வெளிக்குச் செல்லும். ஒவ்வொரு வயல்வெளியும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அதனால் அளவுக்கு அதிகமான தண்ணீர் அடுத்த வயலுக்கு செல்வது போல் அமைக்கபட்டிருக்கும். மேலும் இந்த பாறையை ஒட்டி உள்ள வயல்களில் உருவாகும் மீதமான தண்ணீர் பாறையை ஒட்டியே ஓடை போன்ற அமைப்பில் கலந்து பாறையை சுற்றி ஓடும். இந்த சிறிய ஓடை தான் இந்த நத்தைகளுக்கு வளர்விடம்.
பள்ளியின் விடுமுறை நாட்களில், எனது நண்பர்களோடு சேர்ந்து ஆற்றுக்கு குளிக்க போவோம். எனது ஆயாவோ “ஆத்துல மணல் எடுத்து இருக்காங்க; அந்த இடத்தில தண்ணீர் ஆழமாக இருக்கும்; அப்படியே தண்ணி சுத்தும்; நீ அதுல மாட்டிக்கிட்ட, தண்ணி உன்ன அப்படியே இழுத்துட்டு போயி, உள்ள சொருகிடும்” என பயமுறுத்துவார்கள். நானும் “இல்ல ஆயா; தண்ணி கால் முட்டி அளவுக்கு மட்டுமே போகுது; அதனால ஒன்னும் ஆகாது” என்பேன். இப்படி ஆத்துக்கு குளிக்கும் போகும்போதெல்லாம் அங்குள்ள வளையில் கையை விட்டு குறவ மீனு பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தோம். எனது நண்பன் அங்கேயே பிடிபடும் நண்டோ, மீனும் கரைக்கு கொண்டு வந்து நெருப்பு மூட்டி சுட்டு சாப்பிடுவோம். அந்த சுவைக்கு நானும், எனது நாக்கும், அடிமையாகி போனது.
ஒரு நாள் எனது நண்பன் என்னிடம் “டேய் நாம நத்த கறி சாப்பிட போலாமா? என்றான். அதைக் கேட்ட உடனே எனக்கு நீங்கள் நினைப்பது போன்று தோட்டத்தில் இரண்டு நீட்சியோடு வலம் வரும் நத்தை தான் ஞாபகம் வந்தது. உடனே அவனிடம் “டேய் அதையாடா சாப்பிடுவ? எப்படிடா ? என்றேன். அவன் “டேய், நீ நினைக்கிற மாதிரி இது நிலத்து நத்த இல்ல; தண்ணீரில் வளர நத்தை; சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதுன்னு, எங்க அம்மா சொல்லுச்சு; எங்க அம்மாவே என்ன அங்க போய் சாப்பிட சொல்லி அனுப்பி வைக்கும் தெரியுமா? என்றான். அவர்கள் அம்மாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்; பயங்கரமான ஆளு; சண்டைக்காரி; அவன் ஏதாவது தப்பு பண்ணிட்டா, தெருவே பாக்குற மாதிரி துரத்தி துரத்தி அடிப்பாங்க. மேலும் அவனே சொன்னான், “நம்ம வடக்கு தெருவுல சடையாண்டி பொண்டாட்டி ராமாயி இருக்குல்ல; அதுக்கு வெளிக்கு போற இடத்துல, புண்ணு வந்து இருக்கு, கேள்விப்பட்டயா? பெருசானா நமக்கும் அது மாதிரி புண்ணு வரக்கூடாதுன்னா, நத்த கறி சாப்பிடணும்; புரிஞ்சுதா? எனக்கு இன்னமும் நத்த கரி மேல நல்ல அபிப்பிராயம் வந்துருச்சு. நான் “சரி, நானும் வாரேன்; ஆனா ஓரு கண்டிஷன்; முன்னாடி கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடறப்ப, வீட்டுல இருந்து மிளகாய்த்தூள் எண்ணெய் எல்லாம் கொண்டு வர சொன்னீங்க இல்ல; அது மாதிரி கொண்டு வர மாட்டேன்; சரியா” என்றேன்.
அவன் “அப்பா நீ எதுவும் கொண்டு வர வேண்டாம்; ஒரே ஒரு ஊக்கு; அதான் உங்க அம்மா ஜாக்கெட்ல குத்துவாங்கல்ல; பின்னு ஒன்னு எடுத்து, உன் அருணாக்கயிரலா கோர்த்துக்கிட்டு வா; அது போதும்” என்றான். எனக்கே ஆச்சரியம் கலந்த வியப்பு! எதுவும் கொண்டு வர வேண்டாம்னு சொல்லிட்டானே? இது எப்படி? முன்னாடி கூட்டாஞ்சோறு அக்கறப்ப அதே இவன் என்னவெல்லாம் பேசினான். “டேய் உங்க ஆயா தான் பால்வாடியில வேலை செய்து இல்ல; கவர்மெண்ட் எண்ணெய், பருப்பு எல்லாம் இருக்கும்ல; கொஞ்சம் எடுத்து வாயேன்” என விரட்டியவன், இப்பொழுது இப்படி பேசுகிறானே? என ஆச்சரியப்பட்டு போனேன்.
தொடரும்