நானும் எனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து நத்த கறி சாப்பிட அந்த பெரும்பாறைக்கு போய் சேர, சரியா ஒரு 11 மணி இருக்கும் .வழியில் எனது நண்பன் அங்கிருந்த பிளாஸ்டிக் கவர்களை இரண்டு மூன்று நல்லா பார்த்து பொறுக்கி கொண்டு வந்தான். அதுபோக வீட்டில் இருந்து வரும் பொழுது, ஒரு கவர்ல உப்பு போட்டு எடுத்து வந்தான். பெரும்பாறையில் ஏறுவதற்கு முன்னே அங்க ஓடையில் நத்தைகளை பார்க்க முடிந்தது. ஓடையில மூழ்கி இருக்கும் செடியில் இருக்கிற இலையில நத்தைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. பாறையை ஒட்டியே தண்ணீர் ஓடுவதால் பாறையின் மீது தண்ணீர் பட்டு பாசியாக இருந்தது. அதிலும் நத்தைகள் மேய்ந்து கொண்டு இருந்தன. நத்தையில் மேலிருக்கும் சுருள் போன்ற அமைப்பு அதன் வாயை மூடும், ஓடும் பாசியின் நிறத்திலேயே இருந்தன; கரும்பாசி நிறம்.
எனது நண்பன் எங்களிடம் “டேய் இந்தா இந்த கவர புடிங்க; முரச்சு, முரச்சு பாத்துட்டு இருந்தா என்ன நடக்க போகுது?” என்று சொல்லிவிட்டு, “பெரிய பெரிய நத்தைகளை மட்டும் எடுத்து கவரில் போடுங்க; கவர் ஃபுல்லானதும் தூக்கிட்டு போயி பாறை மேலே கொட்டிட்டு வரணும்” என்றான். எனக்கு மந்துக்குள் பயமாக இருந்தது; எனது முகத்தை பார்த்து புரிந்து கொண்ட எனது நண்பன், “டேய் அது நண்டு மாதிரியெல்லாம் கடிக்காது; ரொம்ப சாது; இப்ப பாரு, என கையை கிட்ட கொண்டு போகும்போதே நத்தை கூட்டுக்குள்ள போயிடும்” என்றவாறே ஒரு நத்தையை நெருங்கினான். நெருங்கு போதே நத்தை கூட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது. அவன் கொடுத்த தைரியத்தில் நான் நத்தைகளை பிடிக்க ஆரம்பித்தேன். வழ வழ என இருந்த நத்தைகளை தேடி தேடி பொறுக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் கவர் முழுவதும் நிரம்பியது. என்னால் அதன் மேல் தூக்க முடியவில்லை; அவனிடம் சொல்லிவிட்டு பாறை மீது ஏறி ஒரு இடத்தில் நத்தைகளை கொட்டி விட்டு வந்தேன். அதேபோல மறுமுறையும் நிரப்பி திரும்பவும் கொட்டினேன். மூன்று பேரும் சேர்ந்து, ஒரு சட்டி நிறைய நத்தைகளை பொறுக்கி எடுத்து விட்டோம். கடைசியாக வந்த நண்பன் வரும்வழியில் இருந்த பெரிய பானையை எடுத்து, அதில் தண்ணீர் நிரப்பி கொண்டு வந்தான். மேலும் அங்கே இதற்கு முன்னரே மூன்று கற்கள் வைத்து சமைத்ததற்கான அடையாளம் இருந்ததால், அதிலேயே நாங்களும் அந்த பானையை வைத்து விட்டோம். பக்கத்தில் இருந்த காய்ந்த விறகுகளையும், இலைகளையும் பொறுக்கி அடுப்பை மூட்டி விட்டோம். என் நண்பன் தான் கொண்டு வந்திருந்த உப்பை பானை தண்ணீரில் அள்ளிப் போட்டுவிட்டு; எங்களை நத்தைகளை எல்லாம் பானையில் போட சொல்ல, நாங்களும் அவ்வாறு செய்தோம்; பானை முழுவதுமாக நிரம்பியது. அங்கு இருந்த பானையின் மூடியை வைத்து மூடிவிட்டு விறகை அடுப்பில் நன்றாக சொருகினான்; நெருப்பு வேகம் எடுத்தது.
சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டது; கூடவே பானையின் மூடியிலிருந்து நீராவி வெளியே வர ஆரம்பித்தது. என் நண்பன் மூடியை இழுத்து உள்ளே பார்த்தான்; நானும் ஒரு வேலை நத்தைகள் வெளியே வர முயற்சி செய்வோம் என்ற ஆசையில் எட்டிப் பார்த்தேன்; தண்ணீர் இதற்கு முன்னரே பச்சை கலந்த பாசி நிறத்தில் இருந்ததால், ஒன்றும் தெரியவில்லை; அவனைப் பார்த்து கேட்டேன் “நத்தை வெந்து விட்டதா?” என்று, அவனும் “இன்னும் கொஞ்ச நேரம் கொதித்த பின் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு, திரும்பவும் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து மூடியை விலக்கி, ஒரு குச்சியால் பானையின் உள்ளே விட்டு ஒரு நத்தையை எடுத்தான். அதில் நத்தையின் வாய்புற ஓடு கறி வெந்ததினால் வெளியே வந்து நீண்டு கொண்டிருந்தது; என் நண்பன் “இதை பார்த்தாயா? நத்தை உயிரோடு இருக்கும் பொழுது இந்த மூடியால் தனது உடம்பை உள்ளே இழுத்து மூடிக்கொள்ளும்; இப்பொழுது கறி நன்றாக வெந்து விட்டதால், உள்ளிருக்கும் கறி மூடியோடு ஒட்டிக்கொண்டு வெளியே வந்திருக்கிறது; இதுதான் கறி வெந்து விட்டது என்பதற்கான அடையாளம்” எனக் கூறிக் கொண்டே அங்கிருந்த செடியில் சில பெரிய இலைகளை பறித்து அதனை பயன்படுத்தி அடுப்பில் இருந்து பானையை தூக்கி பாறையின் மீது கொட்டினான். கூடவே இருந்த சுடுநீரானது வழிந்து ஓடியது; அவன் எங்களை நத்தை குவியலுக்கு அருகில் உட்கார சொன்னான்.
“டேய் வரும்பொழுது வீட்டில் இருந்து ஊக்கு, அதான் “சேஃப்டி பின்” எடுத்து வர சொன்னேன் இல்ல? அதை எடுத்து இந்த நத்தையை இப்படி எடுத்து நத்தையோட மூடியை தூக்கி தூரம் போட்டுட்டு, இந்த பின்ன வெச்சி குத்தி இழுத்திங்கனா; ஓட்டுக்குள்ள இருந்து சதையா வெளியே வரும்; அதோட கடைசி பகுதி கருப்பு கலர்ல இருக்கும் அதை கட் பண்ணி தூக்கி போட்டுட்டு, தண்ணீரில் ஒரு அலசு அலசிட்டு அப்படியே சாப்பிட வேண்டியதுதான்” என சொல்லியவாறு சாப்பிட ஆரம்பித்தான். நானும் அவன் சொன்னபடியே பின்ன எடுத்து ஓட்ட தூக்கி போட்டுட்டு சதையை குத்தி எடுத்தேன்; கறியோட கடைசி பக்கம் கருப்பான பகுதியும் வந்தது; அதனை கட் பண்ணி போட்டுட்டு, தண்ணீரில் அலசிட்டு வாயில போட்டு லேசாக மென்று பார்த்தேன்; அன்றுதான் இந்த மெல்லுடலிகள் எனும் உயிரினத்தின் கறியை சுவைத்தேன்; மற்ற கோழிக்கறி மற்றும் மாட்டுக்கறி விட ஏதோ ஒரு சுவை; உப்போடு வெறும் தண்ணீரில் வெந்ததால், இறுக கடிக்க வேண்டாம் என சொல்லுகிற அளவுக்கு கறியின் மென்மை தன்மை; ஏதோ விதத்தில் மிகவும் பிடித்திருந்தது. படக்கென்று விழுங்கினேன். அடுத்த நத்தையை எடுத்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தேன். எனது நண்பன் “டேய் இந்த நத்தை வாயோட மூடியா எடுத்துட்டு போயி பூமியில புதைச்சு வச்சா காசு கிடைக்கும் தெரியுமா? என்றான்.
-முற்றும்.