சிறை-திரைப்பட விமர்சனம்

சமீபத்தில் “சிறை” எனும் திரைப்பட பார்த்தேன்; கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சனம் அளவில் பாராட்டைப் பெற்ற திரைப்படம் என்பதால் ஜி5 ஓடிடி எனும் சேனலில் பார்க்க நேர்ந்தது. இதில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றம் காவலர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் உயர் அதிகாரிகள் மற்றும் கடினமான பணிச்சூழல் ஆகியவற்றை திரைப்படத்தின் முதல் 20 நிமிடங்களில் தெளிவுபடுத்துகின்ற மாதிரியான காட்சிகள் இடம் பெற்று ஆரம்பமாகிறது. இந்த காட்சிகளில் என்னை கவர்ந்தது எதுனெனில் நீங்கள் எந்த ஒரு பணிக்கு சென்றாலும் அந்தப் பணியின் அதிகாரங்கள், வரம்புகள் ஆகியவற்றை முழுவதுமாக தெரிந்து கொண்டு பணியை செய்ய வேண்டும். அதற்கென இந்த திரைப்படத்தின் சில காட்சிகளில் காவலர் கதாபாத்திரத்தில் தோன்றும் திரு. விக்ரம் பிரபு அவர்கள் காவலர் கையேடு எனும் புத்தகத்தை வாசிப்பதாக அமைத்திருக்கிறார்கள்.

ஆயுதப்படை பிரிவிலிருந்து நெடுந்தூரத்திற்கு விசாரணை கைதிகளை கொண்டு செல்லும் கடினமான பணிக்கு ஆயுதப்படை காவலர்கள் எவ்வாறு பணி ஒதுக்கீடு செய்படுகிறார்கள் என்பதும்; அதற்கான பயண செலவிற்கு இன்றளவும் கைதிகளிடமிருந்தே பணம் பெறப்படுகிறது என்றும் தெளிவாக காட்சிகள் உணர்த்துகின்றன. கதையானது 2003 ஆம் ஆண்டு வேலூரில் இருந்து துவங்குவதாக இருப்பதால், இயக்குனர் அவர்கள் வேலூர் பேருந்து நிலையத்தில் எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்களில் அந்த காலகட்டத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.ஞானசேகர், சட்டமன்ற உறுப்பினர் பெயரை சரியாக கொடுத்திருப்பதின் மூலம் இதற்காக அவர் எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார் என்பது புரிகிறது. திரு.ஞானசேகர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் பெயர் என் கண்ணில் எப்படிப்பட்டதென்றால், எனக்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு கல்லூரி படிப்பிற்காக வந்த பொழுது, முதலாம் ஆண்டு எனக்கு அரசு தங்கும் விடுதியில் இடம் கிடைக்கவில்லை; இதற்காக நான் எனது தொகுதியின் தமிழ் மாநில காங்கிரஸ், அப்போது இருந்த மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸின் எனது சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவராஜ் அவர்களிடம் சென்று முறையிட்டேன்; அவர் எனக்காக வேலூர் திரு.ஞானசேகர் சட்டமன்ற உறுப்பினருக்கு பரிந்துரை கடிதம்  கொடுத்திருந்தார்; நெடுந்தூரம் என்பதால் அதன் அடிப்படையில் எனக்கு இரண்டாம் ஆண்டு அரசு கல்லூரி விடுதியில் இடம் அளிக்கப்பட்டது; இந்த ஒரு நன்றியுணர்வால், அந்த காட்சிகளில் வந்த பெயர்,  என் கண்ணில் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

விசாரணை கைதியான நாயகனை சிவகங்கை மாவட்டத்திற்கு நெடுந்தூரப் பயணத்தில் கொண்டு செல்லும் வழியிலும், அவர் தப்பி ஓடிவிடுவார் என்ற பதை பதைப்பிலும் கதையும், காட்சிகளும் நகர்த்தப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு சூழலும், காட்சிகளும் அதற்கு தகுந்தார் போல் திரைக்கதை திறம்பட கையாளப்பட்டிருக்கிறது. கதையானது எந்த ஒரு வினாவுக்கும் விடை அளிக்கும் விதமாக கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுக்கும் ,ஏன் கைதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை தெளிவுபடுத்த ஆரம்பிக்கும்போது, இன்றளவும் நம்மில் முஸ்லிம் என்றால் தவறு செய்பவர்கள் என்ற பரவலான கண்ணோட்டத்தை உடைக்கும் விதமாக காட்சிகள் உறுதியாக படமெடுக்கப்பட்டிருக்கின்றன. நாயகனின், அதாவது கைதியாக நடிப்பவரின் பெயரான “அப்துல்” என்பதிலிருந்து ,அவர் இந்த பயணத்தில் தப்பி ஓட வாய்ப்பு இருந்தும் தப்பி போகாமல் மீண்டும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வருவதும், அங்கே இருக்கின்ற காவல் அதிகாரி முஸ்லிமாக இருந்தும் சட்டப்படியும் மனிதாபிமான முறையில் நிற்பதும், இன்றைய இந்தியாவிற்கு தேவையான ஒன்றாகும்.

google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0

இத்திரைப்படத்தின் கதை என்பதை வெகுசுலபமாக ஒரே வரியில் சொல்லிவிட்டு போகலாம்; ஊரிலே தனித்த, அப்பாவை இழந்த, அம்மாவினால் மட்டுமே வளர்க்கப்பட்ட ஒரு முஸ்லிம் இளைஞன்; அதே ஊரில் காதலால் தனது அம்மாவை இழக்கிறான்; சூழலின் காரணத்தால், நாயகியின் அப்பாவை தள்ளி விட்டதின் மூலம் கொலைகாரனாகிறான்; ஐந்து வருடங்கள் விசாரணை கைதியாக இருக்கிறான்; அவனுக்காக ஐந்து வருடங்களாக நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும்பொழுதெல்லாம் அவனைப் பார்க்க, வருகை புரியும் கதாநாயகிக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டம். இதில் விக்ரம் பிரபு எப்படி உதவினார்?, கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? என்பதை காவலர் பணியில் நடக்கும் நடைமுறை சிக்கல், பணிச்சுமை மற்றும் நீதிமன்றங்களால் நீதி கிடைக்க பெறுவதில் நடைபெறும் காலதாமதம் ஆகியவற்றோடு திரைப்படம் விறுவிறுப்பாக கடத்தப்படுகிறது.

கிராமங்களில் காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகள் மிகவும் இயல்பாகவே இருக்கிறது; 2003 ஆம் ஆண்டு கால கட்டங்களில் தொலைக்காட்சிகள் என்பது அரிது. வீடியோ கேசட்களை கொண்டு, ஒரு ஊரில் நல்லது, கெட்டது எதுவென்றாலும் தெருவில், ஒரே இரவில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையிட்டு காண்பிப்பதின் மூலம் எத்தனையோ காதலர்களுக்கு இரவுகளில் இணைந்து இருப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. 

இந்தத் திரைப்படத்தில் வரும் எந்தவொரு காட்சியும் சரி; வசனமும் சரி; தேவையில்லாதது என்று எதையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை. இவைகள் கதையோடு முற்றிலுமாக இணைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வாய்தாவுக்கு வரும் நாயகனை பார்க்கும் வரும் நாயகி; அவள் வருவதில் தாமதமான பொழுது நாயகன் படும் வேதனை; இவை அனைத்தும் புது முகங்களாக இருந்தாலும், தேவைக்கேற்ப சரியாகவே செய்திருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு வரும் ஒவ்வொருவரும் தங்களுடைய நடிப்பை சரியான அளவில் வழங்கியிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை காவலர்களே நீதிமன்ற டவாலீக்கு, தங்களின் விசாரணை கைதியின் கோப்பு முன் வரிசைக்கு தள்ளப்பட, கையூட்டு கொடுக்கும் அவலம்; ஒவ்வொரு நீதிபதியின் பணியிடை மாற்றமும் மற்றும் அவர்களின் அணுகுமுறையும் சாதாரண குடிமக்களையும், நீதி கேட்டு காத்திருக்கும் விசாரணை கைதிகளையும், எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதை சில காட்சிகள் உருக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு காவலரும், தனக்கான அதிகாரம் என்ன என்பதை தெரிந்திருப்பதன் மூலம், அதனை சாமானிய மக்களுக்கும், ஆதரவற்றவர்க்கும் உதவுவதன் மூலம் சமூகம் எப்படியான மாற்றத்தை பெறும் என்பதை திரைக்கதை நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. மிகவும் எதார்த்தமாகவும், நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பை, அது அரசின் கடைநிலை ஊழியிருக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தைக் கொண்டு விளிம்பு நிலை மக்களுக்கு உதவி விட முடியும் என்பதை இத்திரைப்படம் வலுவாக பதிவு செய்திருக்கிறது. காண வேண்டிய திரைப்படங்களில் ஒன்று. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *